இவ்வாறு நான் கேள்வியுற்றேன்:
ஒருமுறை புத்த பகவான் அளாவியில் அளவாகன் என்ற யாக்ஷையின் குடிலில் தங்கியிருந்தார். அப்போது அளவாகன் பகவரிடம் வந்து,
“துறவியே, வெளியே போ,” என்றான். “சரி போகிறேன் நண்பரே,” என்று கூறிப் பகவர் வெளியேறினார்.
“துறவியே உள்ளே வா.”—“சரி வருகிறேன் நண்பரே,” என்று கூறிப் பகவர் உள்ளே வந்தார்.
“துறவியே, வெளியே போ,” என்று அளவாகன் பகவரிடம் இரண்டாம் முறையாகக் கூறினான்.—“சரி போகிறேன் நண்பரே,” என்று கூறிப் பகவர் வெளியேறினார்.
“துறவியே உள்ளே வா.”—“சரி வருகிறேன் நண்பரே,” என்று கூறிப் பகவர் உள்ளே வந்தார்.
“துறவியே, வெளியே போ,” என்று அளவாகன் பகவரிடம் மூன்றாம் முறையாகக் கூறினான்.—“சரி போகிறேன் நண்பரே,” என்று கூறிப் பகவர் வெளியேறினார்.
“துறவியே உள்ளே வா.”—“சரி வருகிறேன் நண்பரே,” என்று கூறிப் பகவர் உள்ளே வந்தார்.
“துறவியே, வெளியே போ,” என்று அளவாகன் பகவரிடம் நான்காம் முறையாகக் கூறினான்.—“முடியாது நண்பரே. வெளியேற மாட்டேன். நீ செய்ய முடிந்ததைச் செய்து கொள்,” என்று பகவர் கூறினார்.
“உன்னிடம் ஒரு கேள்வி கேட்பேன், துறவியே. பதில் கூறாவிட்டால், உன் மனத்தைக் கட்டிப் போட்டு அல்லது நெஞ்சைப் பிளந்து அல்லது கால்களைப் பற்றிப் பெருங்கடலின் அக்கறையில் வீசி விடுவேன்,” என்று மிரட்டினான்.
“நண்பரே தேவர்கள், மாரர்கள், பிரமர்கள் வாழும் உலகிலோ அல்லது துறவிகள், பிராமணர்கள், தெய்வங்கள், ஆவிகள், மனிதர்கள் வாழும் உலகங்களிலோ எவராலும் என் மனத்தைக் கட்டிப்போட அல்லது என் நெஞ்சைப் பிளக்க அல்லது கால்களைப் பற்றிப் பெருங்கடலின் அக்கறையில் வீசக் கூடியவர் யாரையும் காணவில்லை; இருந்தாலும் நண்பரே, கேட்க விரும்புவதைக் கேள்.”
பகவரை அளவாகன் பா வடிவில் கேட்டான்:
மனிதனுக்குச் சிறந்த செல்வம் எது?
எதை நன்கு பயின்றால் மகிழ்ச்சி கிடைக்கும்?
சுவைகளுள் சிறந்த சுவை எது?
எப்படி வாழ்ந்தால் அதைச் சிறந்த வாழ்வு என்பார்கள்?புத்தர்:
நம்பிக்கையே மனிதனுக்கு சிறந்த செல்வம்;
அறத்தைப் பயில்வதே மனிதனுக்கு சிறந்த மகிழ்வைத் தரும்;
வாய்மை என்ற சுவையே, சுவைகளுள் சிறந்தது;
மெய்ஞ்ஞானத்தோடு வாழ்ந்த வாழ்வையே சிறந்த வாழ்வு என்பார்கள்.அளவாகன்:
வெள்ளத்தைத் தாண்டுவது எப்படி?
கடலைத் தாண்டுவது எப்படி?
துக்கத்தை முடிப்பது எப்படி?
எவ்வாறு ஒருவன் தன்னைத்
தூய்மைப் படுத்திக் கொள்வது?புத்தர்:
நம்பிக்கையோடு வெள்ளத்தைக் கடக்க வேண்டும்;
விடாமுயற்சியோடு கடலைக் கடக்க வேண்டும்;
நன்முயற்சி செய்து துக்கத்தை முடிக்க வேண்டும்;
மெய்ஞ்ஞானத்தோடு ஒருவன் தூய்மைப் படுகிறான்;அளவாகன்:
எவ்வாறு மெய்ஞ்ஞானத்தை வெல்வது?
செல்வம் பெறுவது எப்படி?
கீர்த்தி பெறுவது எப்படி?
நண்பர்களை வெல்வது எப்படி?
இந்த உலகிலிருந்து அடுத்ததற்குச் செல்லும் போது துயரப்படாமல் இருப்பது எப்படி?புத்தர்:
நற்கடைப்பிடியும் விவேகமும் உள்ளவன்,
அறத்தில் நம்பிக்கை உள்ளவன்;
அந்த அறத்தைக் கேட்க விரும்புவதால்
நிப்பாண ஞானத்தை வெல்கிறான்.திறமையானவன் சுறுசுறுப்பானவன்,
தன் முயற்சியினாலேயே செல்வம் பெறுகிறான்;
வாய்மையோடு கீர்த்தி பெறுவான்,
தானம் செய்து நண்பர்களை அடைவான்.நம்பிக்கை உள்ளவன் வாய்மையுடையவன்,
ஒழுக்கம் உடையவன், உறுதியுடையவன், தானம் செய்ய விரும்புபவன்;
இந்த நான்கு மேன்மையான பண்புகளினால்
மறுமையில் துயரப்படுவதில்லை.வாய்மையும், அடக்கமும்,
தானமும், பொறுமையும்:
இவையே மனிதனை மேன்மையாக்குவன;
இதைவிட மேன்மையான இயல்புகள் இருந்தால்
மற்ற சமணரையும், பிராமணரையும் கேள்.அளவாகன்:
மற்ற சமணரையும் பிராமணரையும்
ஏன் கேட்க முயற்சி செய்யவேண்டும்,
எனக்கு நன்மை பயப்பனவற்றை
இன்று நானே தெரிந்து கொண்ட பின்?எனது நன்மைக்கென்றே
புத்தர் அளாவி வந்தார்;
தானமென்ற நல்வினை நற்பயன் தரும்,
என்பதையும் இன்று நானும் கற்றுக் கொண்டேன்.கிராமம் கிராமமாக, நகரம் நகரமாக
நான் இனி நடமாடி,
மேன்மையான புத்தரைப் போற்றுவேன்.
அத்தோடு சிறப்பாக மொழியப்பட்டுள்ள தம்மத்தையும் போற்றுவேன்.
இவ்வாறு கூறிய பின், அளவாகன் பகவரிடம் கூறினான்:
“அருமை ஐயா கௌதமரே! உங்கள் போதனை அருமை! குப்புற விழுந்ததை நேர் செய்தது போல, மறைந்ததைத் தெளிவாக்குவது போல, தொலைந்து போன ஒருவனுக்கு வழி காட்டுவது போல, இருட்டான இடத்திற்கு விளக்குக் கொண்டு செல்வதனால் கண்கள் உருவங்களைக் காண முடிவது போல, ஐயா கௌதமரே—பல தெளிந்த நியாயமான விளக்கங்களோடு தர்மத்தைத் தெளிவாக்கி உள்ளீர்கள். ஐயா கௌதமரிடம் நான் அடைக்கலம் செல்கின்றேன். தர்மத்திடம் அடைக்கலம் செல்கின்றேன். சங்கத்திடம் அடைக்கலம் செல்கின்றேன். இன்றிலிருந்து என் வாழ்நாள் முடியும் வரை கௌதமர் என்னை அவரிடம் அடைக்கலம் சென்ற சீடராக ஏற்றுக் கொள்வாராக.”
விமர்சனங்கள் [0]